அமைதியான நள்ளிரவு. அந்த அறையில் ஒரு கணினித் திரை மட்டும் வெளிச்சம் தருகிறது. ஒரு AI ஆய்வாளர் சோம்பல் முறித்தபடி ஒரு கேள்வியைத் தட்டச்சு செய்கிறார்: ‘‘இந்த மென்பொருளில் எங்கேனும் பலவீனம் இருக்கிறதா, சோதித்துச் சொல்?’’

அவர் உறங்கி எழுந்து காபிக் கோப்பையுடன் வந்து பார்த்தால், அந்த கணினித் திரையில் ஒரு முழுமையான ‘தாக்குதல் வரைபடம்' (Cyber Attack Plan) தயாராக இருக்கிறது. கொடுக்கப்பட்ட ஒரு மென்பொருளின் பலவீனத்தை மட்டும் ஆராயாமல், பல தசாப்தங்களாக உலகின் தலைசிறந்த ஹேக்கர்களால் கண்டுபிடிக்க முடியாத ரகசியப் பிழைகளை, வெறும் ஆறே மணி நேரத்தில் ஒரு மென்பொருள் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

இது ஏதோ ஹாலிவுட் படத்தின் திரைக்கதை அல்ல, கடந்த ஏப்ரலில் நிஜமாகவே நடந்திருக்கிறது. இந்த ‘டிஜிட்டல் பூத’த்தின் பெயர், Mythos (மைத்தோஸ்)!

யார் இந்த மைத்தோஸ்?

 

‘ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனம் உருவாக்கிய இந்த AI, சாதாரண சாட்பாட் (Chatbot) கிடையாது. இது ஒரு ‘Frontier Model.’ அதாவது, இதற்கு ஒரு வேலையைக் கொடுத்துவிட்டால், அதுவே சுயமாகத் திட்டமிட்டு, முடிவெடுத்து, அந்த வேலையை முடிக்கும் வரை விடாது. ஒரு மென்பொருளில் இருக்கும் பிழைகள் மற்றும் பலவீனங்களை ஆராயும் ஒரு சைபர் பாதுகாவலனாகத்தான் மைத்தோஸை உருவாக்கினார்கள். இதே வேலையைச் செய்ய ஒரு மனித ஆராய்ச்சியாளருக்கு வாரக்கணக்கில் உழைப்பு தேவைப்படும். ஆனால் மைத்தோஸ், கோடிக்கணக்கான வரிகள்கொண்ட மென்பொருள் குறியீடுகளை மின்னல் வேகத்தில் ஸ்கேன் செய்து, அதில் மறைந்திருக்கும் நுட்பமான பலவீனங்களைச் சுயமாகக் கண்டறிகிறது. ஆனால், அதில் ஒரு சிக்கல் நிகழ்ந்துவிட்டது. உலகின் ஆகச்சிறந்த டிஜிட்டல் பாதுகாவலனை உருவாக்கப்போய், ஒரு ‘அதிமேதாவி திருடனை' உருவாக்கிவிட்டது போல இருக்கிறது இதன் கதை.

Advertisement

இயந்திர உயிர் கொண்டதும் மைத்தோஸ் செய்த முதல் வேலை உலகையே அதிர வைத்தது. OpenBSD என்பது `உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சாஃப்ட்வேர்’ என்று பெயர்பெற்றது. Firewall-களிலும், Router-களிலும் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருளில், 27 ஆண்டுகளாக யாரும் கண்டுபிடிக்காத ஒரு பிழை ஒளிந்திருந்தது. மைத்தோஸ் அதைக் கண்டுபிடித்தது. 27 ஆண்டுகள் என்றால், இன்று பாதுகாப்பு நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் பிறக்கவே இல்லாத காலத்திலிருந்து மறைந்திருந்த பிழை. உலகின் சிறந்த நிபுணர்கள் ஆண்டுதோறும் பரிசோதித்தும், எந்தக் கணினியும் இதுவரை கண்டுபிடிக்காத பிழையை மைத்தோஸ் கண்டுபிடித்தது.

இது தவிர, கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸ், எட்ஜ், சஃபாரி போன்ற முன்னணி உலாவிகளில் ஆயிரக்கணக்கான பிழைகளை இது கண்டறிந்திருக்கிறது. குறிப்பாக, உலாவியின் பாதுகாப்பான சுவர்களைத் தகர்த்துவிட்டு கணினியின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டையும் எடுக்கும் ‘கெர்னல்-லெவல்' பிழைகளை இது அடையாளம் கண்டிருக்கிறது.

Advertisement

அதேபோல், நாம் மொபைலில் வீடியோ பார்க்கப் பயன்படுத்தும் FFmpeg மென்பொருளில் 16 ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் இருந்த ஓட்டையையும் இது அம்பலப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், உலகின் ஒவ்வொரு கணினியும், செல்போனும் எவ்வளவு பலவீனமானவை என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.