
6 வயதில் யூடியூப்பிற்கு அடிமை... 9 வயதில் இன்ஸ்டாகிராமிற்கு அடிமை.
10 வயதில், மன அழுத்தம் வந்துவிட்டது. இதனால், என்னை நானே தாக்கிக் கொள்வேன்.
13 வயதில் எனக்கு Social Phobia (சமூக பயம்), Body Dysmorphic Disorder (உடல் உருவக் குறைபாடு) ஆகியவை எனக்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது அத்தனைக்கும் என்னுடைய சமூக வலைதள அடிக்ஷனே காரணம்" என்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர் நீதிமன்றத்தின் படிகளை ஏறியிருந்தார் 20 வயதான பெண்மணி ஒருவர்.
இது மெட்டா மற்றும் யூடியூப் நிறுவனத்திற்கு எதிரான வழக்கு ஆகும். ஆறு வாரக் கால விசாரணைக்குப் பிறகு, நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
அந்தத் தீர்ப்பு...
"இளம் பயனாளர்களை அடிக்ஷனில் தள்ளுவதற்கேற்ப தான் மெட்டா மற்றும் யூடியூப் தங்கள் பிராடக்டுகளை வடிவமைத்திருக்கின்றன.
முக்கியமாக, இவற்றின் பயன்பாட்டால் என்னென்ன நடக்கும் என்பதற்கான எச்சரிக்கைகளை இந்த நிறுவனங்கள் வழங்கவில்லை... வழங்க தவறி இருக்கின்றன.
இதனால், மனுதாரருக்கு 6 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடாக தர வேண்டும். இதில் 70 சதவிகிதத்தை மெட்டா வழங்க வேண்டும்... மீதி 30 சதவிகிதத்தை யூடியூப் வழங்க வேண்டும்" என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



