Published:Updated:
 
`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’
`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’
 
 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஒரு முக்கிய கேள்வி - இரு நாடுகளும் அண்டை நாடுகள் அல்ல, இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை ஏதும் இல்லை.  இந்த மோதலுக்கு என்ன காரணம் ?


இந்த கேள்விக்கு விடை காண ஈரான் - இஸ்ரேலிய உறவுகளின் கடந்த குறைந்தது சுமார் 40 ஆண்டுகால வரலாற்றைப் பார்க்கவேண்டும்.

இஸ்ரேல், வரலாற்று ரீதியான பாலத்தீன மண்ணில் 1948ல் ஒரு தனி நாடாக  மேற்குலக உதவியுடன் உருவாக்கப்பட்டதிலிருந்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவுகள் சுமூகமாக இருந்திருக்கின்றன. அதாவது ஈரானில் 1979ல் இஸ்லாமியப் புரட்சி நடந்து மன்னராட்சி கவிழ்க்கப்பட்டு ,  நாடு ஒரு இஸ்லாமியக் குடியரசாக அறிவிக்கப்படும்வரை.

1979க்கு முன் நடந்த முகமது ரேசா பஹ்லவியின் மன்னராட்சி ஈரானில் 1953ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆதரவுடன் நடந்த அதிரடி ஆட்சி மாற்றத்துக்குப் பின் உருவானது.  மேற்குலக நாடுகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பஹ்லவி,  ஈரானை இரும்புக் கரம் கொண்டு ஆண்டு வந்தார்.

இஸ்ரேலும் ஈரானும் அந்தக்காலத்தில் நட்பு நாடுகள்.  இஸ்ரேலுடன் உறவு என்பதை மன்னர் பஹ்லவி அரசு,  அரபு தேசியவாதத்தை எதிர்கொள்ளவும்,  சோவியத் ஒன்றிய செல்வாக்கை கட்டுப்படுத்தவும் ஒரு கருவியாக நினைத்தார்.

 
மன்னர் முகமது ரேசா பஹ்லவி
மன்னர் முகமது ரேசா பஹ்லவி
Wikipedia
 

 ஆரம்ப கால நட்பு!

1950-களிலேயே இஸ்ரேலை தனி நாடாக ஈரான் அங்கீகரித்தது.  இஸ்ரேலை அங்கீகரித்த முதல் சில இஸ்லாமிய நாடுகளில் ஈரானும் ஒன்று என்ற தகவல் இன்று ஈரான்- இஸ்ரேல் உறவுகளின் நிலையைப் பார்ப்போருக்கு ஆச்சரியத்தைத் தரும்.  

இன்று ட்ரம்ப்பும், இஸ்ரேலும் அழித்தொழிக்கத் துடிக்கும் ஈரானின் அணு சக்தித் திட்டத்துக்கு அந்தக் கால கட்டத்தில் ஆரம்ப விதையே அமெரிக்கா போட்டதுதான்.  அமைதிக்கான அணுசக்தி  “ Atoms for Peace”  என்ற அமெரிக்க திட்டத்தின் உதவியுடன் தான் ஈரானிய அணு சக்திக் கனவு தொடங்கியது.  அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் காலத்தில் 1953ல் ஈரானுடன் அமெரிக்கா இந்த திட்டத்தின் அடிப்படையில் அணு சக்தி நிலையத்தை உருவாக்கி,  அதை இயக்க பயிற்சியும் எரி பொருட்களும் தந்தது. பின்னர்  ஈரான் 1968ல் அணு ஆயுதப் பரவலாக்கல் தடை ஒப்பந்தத்தில் ( Nuclear Non Proliferation Treaty) கையெழுத்திட்டது.  

ஆனால் 1979ல் அயோதுல்லா கொமெனியின் தலைமையில் இஸ்லாமியப் புரட்சி நடந்து மன்னராட்சி கவிழ்ந்த பின்னர், ஈரானின் நிலைப்பாடு மாறியது.  இஸ்ரேலையும், அமெரிக்காவையும்,  மேற்குலகையும் ஈரான் விரோத நாடுகளாகப் பார்க்கத்தொடங்கியது. இஸ்ரேலுக்கு தனிநாடாக இருக்க உரிமையே இல்லை என்ற நிலைப்பாட்டை  கோமெனி அரசு எடுத்தது.  அமெரிக்காவை “சாத்தான்” என்று தொடர்ந்து விமர்சித்த கோமெனி அரசு ,  ஈரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு பெரும் சர்வதேச நெருக்கடியை உருவாக்கியது.