
இந்தியாவில், உருளைக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் மாநிலம் உத்தரப்பிரதேசம். அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களிலும் கணிசமான அளவுக்கு உருளைக்கிழங்கு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்தியாவில் பல உருளைக்கிழங்கு ரகங்கள் பயிரிடப்படுகின்றன. குஃப்ரி சிந்துரி, குஃப்ரி சந்திரமுகி, குஃப்ரி ஜோதி, குஃப்ரி பாட்ஷா, குஃப்ரி பஹார் ஆகியவை பிரபலமான ரகங்கள். ஒவ்வொரு ரகத் துக்கும் தனித்துவமான பண்புகள் மற்றும் பயன் பாடுகள் உள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் அதிகமாகப் பயிர் செய்யப் படும் உருளைக்கிழங்கு ரகம், குஃப்ரி சந்திரமுகி. இது விரைவாக விளையக்கூடிய ரகம். அதிகச் சுவை கொண்டது. இது தவிர, குஃப்ரி பாட்ஷா மற்றும் குஃப்ரி ஜோதி போன்ற ரகங்களும் அங்கு கணிசமாகப் பயிரிடப் படுகின்றன.
இந்த ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தின் சிங்கூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டதாலும் அமோக விளைச்சலாலும், சந்தைகளில் வரத்து அதிகரித்து கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, உருளைக் கிழங்கு விவசாயிகளுக்குக் கொள்முதல் விலையாக ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் மட்டுமே கிடைக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. இதனால், கிழங்குகளைச் சாலைகளில் கொட்டி விவசாயிகள் தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



