இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28ம் நாள் தொடங்கிய குண்டுத் தாக்குதல், சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலான பிராந்தியச் சேதத்தையும், உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு அதிர்ச்சியையும், ஏற்றுக்கொள்ள முடியாத சிவிலியன் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இரானை கற்காலத்துக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அமெரிக்கத் தாக்குதல் இருக்கும் என்று கடந்த வாரம் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அதிபர் டிரம்ப், இரானுக்கு எதிராக தனது சமூக ஊடக மிரட்டல்களை அதிகரித்தார். சில நாட்களுக்குப் பின், ஹோர்மூஸ் நீரிணையை இரான் உடனடியாகத் திறக்க வேண்டுமென்று பதிவிட்ட டிரம்ப், இரானை தகாத வார்த்தைகளால் ஏசினார். கடைசியாக, திங்கட்கிழமை இரான் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க 48 மணி நேரக் கெடுவிதித்து, இரான் பணிய மறுத்தால், இரானிய நாகரீகமே அழிக்கப்படும் என்று மிரட்டி உலகைக் கதி கலங்க வைத்து, கடைசியில் ‘எதிர்-உச்சகட்ட காட்சி’யாக (anti climax) இரு வார போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்.



