Published:Updated:
 
கருப்பு - சூர்யா
கருப்பு - சூர்யா
 
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். த்ரிஷா, இந்திரன்ஸ், சுவாசிகா, ஜார்ஜ் மரியான், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட 'கருப்பு' திரைப்படம், படப்பிடிப்பு முடிந்தும் டிஜிட்டல் உரிமம் மற்றும் வணிகம் தொடர்பான காரணங்களால் வெளியாவதில் தாமதமானது. கடந்த ஆண்டே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
 
ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி - சூர்யா
 

சூர்யாவின் பிறந்தநாள் டீசர் மற்றும் தீபாவளிக்கு வெளியான 'காட் மோட்' பாடலுக்குப் பிறகு நீண்ட இடைவெளி ஏற்பட்டு, கடந்த மார்ச் மாதமே அடுத்த அப்டேட்கள் வெளியாகின. படம் மே 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், போஸ்டர்களில் இருந்து தேதி நீக்கப்பட்டது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. சென்சார் பணிகளுக்காகவே இந்த மாற்றம் என்றும், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கமளித்தார். மதுரையில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடந்த நிலையில், தேர்தல் மற்றும் அரசியல் சூழல் காரணமாக டிரெய்லர் வெளியீடு தள்ளிப்போனது. புதிய அரசு பதவியேற்ற பின்னரே டிரெய்லர் வெளியாகி ரிலீஸ் பணிகள் வேகம் எடுத்தன.