“குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா, நண்பீஸ்-க்கு என்னுடைய - உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்’’ என்று த.வெ.க தலைவர் விஜய் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட, `விஜய் மீது தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போர்க்கொடி உயர்த்துகிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள். என்ன காரணம்?

தமிழ்நாட்டில் இதுவரை குறிப்பிட்ட சாதி, மதம், கட்சி, பாலினம் சார்ந்து இருந்த வாக்குவங்கிகளைத் தாண்டி, இந்த முறை ‘பெற்றோர் வாக்குவங்கி’ என்ற ஒன்று புதிதாக உருவாகியிருந்தது. தங்கள் வீட்டுப் பெரியவர்களை, விஜய்க்கு ஓட்டுப்போடச் சொல்லி குழந்தைகள் நச்சரித்த கதைகளை தமிழகம் முழுவதும் கேட்க முடிந்தது. அதற்கு முக்கியக் காரணம், “குட்டீஸ்களே... உங்களுக்கு ஏதாவது வேணும்னா அடம்பிடிச்சு அதை சாதிக்கிறீங்கல்ல... அதே மாதிரி இந்த `விஜய் மாமா’ ஜெயிக்கறதுக்காக உங்க வீட்டுல இருக்குற பெரியவங்களை விசிலுக்கு ஓட்டுப்போட வைங்க” என்று இறுதிநாள் பிரசாரத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் விஜய்.

அது மட்டுமல்ல, தேர்தல் முடிந்ததும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் வெளியிட்ட அறிக்கையிலும், குழந்தைகளுக்குத் தனியாக நன்றியும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம்தான் குழந்தைகள் நல ஆர்வலர்களைக் கொதிப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றிருக்கிறது. விஜய்க்கு எதிராக மிகப்பெரிய அளவில் கையெழுத்து இயக்கம் நடத்தவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதவும் தயாராகிவருகிறார்கள்.

இது பற்றி குழந்தைகள் நல ஆர்வலர் தேவநேயனிடம் பேசினோம். ``தேர்தல் ஆணைய விதிகளின்படி குழந்தைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் செயல்பாடுகளில் பயன்படுத்தக் கூடாது. அதுமட்டுமல்ல, இளம் சிறார் நீதிச் சட்டத்தின்படியும், குழந்தைகளை இந்த மாதிரி துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ, இது போன்ற வேலைகளில் பயன்படுத்தவோ கூடாது. குழந்தைகள் அவர்களாகவே விரும்புகிறார்கள் என்பதெல்லாம் தவறான அணுகுமுறை மட்டுமல்ல, குற்றமும்கூட. விஜய் இந்த அனைத்துக் குற்றங்களையும் செய்திருக்கிறார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருக்கிறார்.