
காவிரி மேட்டூர் அணை திட்டம் செயலாக்கம் அடைந்தபோது பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் அப்போது நாடு இருந்தது அனைவரும் அறிந்ததே! இந்திய நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த பல சமஸ்தானங்களில் பெரிய மாகாணமாக விளங்கியது “மெட்ராஸ்”. “ஜஸ்டிஸ் கட்சி” எனப்படும் “நீதிக்கட்சி” ஆங்கிலேய அரசுக்கு ஆதரவான நிலை எடுத்தும், காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாகவும் மெட்ராஸ் மாகாண கவுன்சில் (MADRAS LEGISLATIVE ASSEMBLY) செயல்பட்டது. 1920 லிருந்து நீதிக்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் பங்கு பெற்றனர். கவுன்சிலில் மொத்தம் 132 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் 34 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். மற்றவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரட்டை ஆட்சி முறை என்ற வகையில் இந்த சட்டமன்றம் செயல்பட்டது.
மெட்ராஸ் சட்டமன்றத்தில் நடந்த பல்வேறு விவாதங்கள்
“காவிரி - மேட்டூர் அணை திட்டம்” செயல்படுத்த துவங்கியதிலிருந்து கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணும் வரை பல்வேறு சமயங்களில் மெட்ராஸ் சட்டமன்றத்தில் இது குறித்து நடந்த பல்வேறு விவாதங்கள் மிகுந்த சுவாரசியமானவை. இது குறித்து ‘தமிழ்நாடு சட்டமன்ற நூலகத்தில்’ அனுமதி பெற்று அங்கு சென்று நேரடியாக தகவல்களை திரட்டி, அவை சுருக்கமாக இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
சென்ற நூற்றாண்டில், இந்த மேட்டூர் அணை திட்டம் செயலாக்கம் பெறுவதற்கு அரசு சார்பில் சட்டமன்றத்தில் கவுன்சிலின் செயற்குழு உறுப்பினரும் “லா மெம்பர்” (LAW MEMBER) பொறுப்பு வகித்தவருமான சர்.சி.பி ராமசாமி அய்யரின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிய வருகிறது.
1921 ஆம் வருடம் தொடங்கி அணை கட்டுமான கால வரிசைக்கேற்ப, ஆண்டு வாரியாக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் உறுப்பினர்களின் விவாதங்களும் அப்படியே தரப்பட்டுள்ளன.
இந்த சட்டமன்ற விவாதங்களில் பலர் பங்கெடுத்து பேசியிருந்தாலும் கோயம்புத்தூரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சி.வி.வெங்கடரமண அய்யங்கார் (சி.வி.வி), V.C.வெள்ளிங்கிரி கவுண்டர், நாச்சிமுத்து கவுண்டர், சேலத்தைச் சேர்ந்த எல்லப்பா செட்டியார் போன்றவர்களின் பங்கு அளப்பரியது.

சிக்கனமாக அணை கட்டி முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் மேலோங்கி இருந்தது அவர்களின் உரைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது.
இந்த விவாதங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் தான் நடைபெற்று ஆவணங்களாக பதிவாகி இருந்தது. தமிழ்நாடு தலைமைச் செயலகம் மற்றும் மெட்ராஸ் ஆவணக் காப்பகம் போன்ற இடங்களில் தேடி எடுத்த அனைத்தையும் தமிழில் மொழி பெயர்த்து இங்கு வரிசைப் படுத்தியுள்ளேன்.
இனி வரிசைக்கிரமமாக மெட்ராஸ் சட்டமன்ற நிகழ்வுகளில் 1921 முதல் 1936 வரையிலான காலத்தின் உள்ளே நுழைவோம்.




